புதிதாக காண வந்த ஒருவன்
‘”என் சகோதரி உங்கள் வாசகி
அவளுக்கு வீடியோ காலில்
ஒரு ஹாய் சொல்கிறீர்களா?” என்றான்
அந்தப் பெண்
அப்போது சிங்கப்பூர் சாலையில்
ஒரு காரில் போய்க்கொண்டிருந்தாள்
என் முகத்தை கண்டதும்
‘ லவ் யூ மனுஷ் ‘ என்று கத்தினாள்
அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை
மீண்டும் அதையே சொன்னாள்
அடுத்த நாள்
அவளது அண்ணன் சொன்னான்
“என் தங்கை உங்களிடம் பேசும்போது
அவளது பாய் ஃப்ரண்ட்
அவள் அருகில் இருந்தான்
பெரிய பிரச்சினையாகிவிட்டது
‘ இந்த ஐ லவ் யூ வைச் சொல்ல
என்னை ஐந்துவருடம் காக்க வைத்தாய்
ஆனால் முன்பின் தெரியாத ஒருவனிடம் சொல்ல
உனக்கு ஒரு நிமிடம்கூட ஆகவில்லை’ என்று
சொல்லி சண்டையிட்டானாம்” என்றான்
அவனிடம் சொன்னேன்:
எனக்கு சொல்லப்படும்
‘ ஐ லவ் யூ ‘ எல்லாம்
ஒரு பறவையிடம் சொல்லும் லவ் யூ
ஒரு எருமை மாட்டிடம் சொல்லும் லவ் யூ
ஒரு மரத்திடம் சொல்லும் லவ் யூ
ஒரு புல்லிடம் சொல்லும் லவ் யூ
ஒரு வளர்ப்புப் பிராணியிடம் சொல்லும் லவ் யூ
ஒரு குழந்தையிடம் சொல்லும் லவ் யூ
ஒரு புத்தகத்திடம் சொல்லும் லவ் யூ
காமம் நீக்கிய லவ் யூ
காதல் நீக்கிய லவ் யூ
வேறு பொருத்தமான வார்த்தை கிடைக்காததால்
சொல்லப்படும் லவ் யூ
எந்த ஆர்கஸமும்
எப்போதும் இருந்திடாத
ஒரு பரிசுத்த ஆவிக்கு
இன்னொரு பரிசுத்த ஆவி
விளையாட்டாகச் சொல்லும்
லவ் யூ
8.7.2022
காலை 11.22
மனுஷ்ய புத்திரன்