ஒவ்வொரு நாள் காலையிலும்
கண் விழிக்கும் போதும்
தோன்றும் எண்ணம் ஒன்றே ஒன்றுதான்
இந்த ‘ மொபைல் டேட்டா’வை
இன்று இயக்கவே கூடாது
செய்தி நீரோடைகளை காணக் கூடாது
உரையாடல் பெட்டிகளை திறக்கக் கூடாது
யார் கண்ணிலும் படக் கூடாது
இந்த ‘சிம்’மைக்கூட உருவி எறிந்து விட வேண்டும்
இருக்கிறேனா செத்தேனா என்றுகூட
ஒருவருக்கும் தெரிய வேண்டாம்
ஒவ்வொரு நாளும்
இதைத்தான் நினைக்கிறேன்
அப்புறம் எங்கே போவதெண்று தெரியாமல்
இங்கேயே வந்து விடுகிறேன்
எவ்வளவு தூரம்
மனம் கசந்து நடந்தாலும்
நம் வீடுகளுக்கே திரும்புவது போல
என் நெஞ்சில் ஒரு துளி வெறுப்பில்லை
நான் இங்கிருப்பது
உனக்கு ஒரு பொருட்டே அல்ல என
என்னை உணரச் செய்யும்
இன்னுமொரு வறண்ட பொழுதைத் துவங்க
அவ்வளவு சோர்வாக இருக்கிறது
5.7.2022
காலை 7.57
மனுஷ்ய புத்திரன்