கண்ணீரைத் துடைத்தவர்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டியதில்லை
………………………..
எவ்வளவு எளிமையாக சொல்லி விட்டாய்:
‘ஒருவரின் அன்பினால்
ஆக்ரமிக்கப்பட்டிருந்தால்
இன்னொரு அன்பை
நினைக்க வேண்டியதில்லை
அதை திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை
அதற்காக குற்ற உணர்வு கொள்ள வேண்டியதில்லை
அதற்கு எந்த நியாயமும் செய்ய வேண்டியதில்லை
பேசி மாதங்களாகி விட்டது என்பதுகூட
கவனத்திற்கு வரவேண்டியதில்லை
கண்ணீரைத் துடைத்தவர்களின் கண்ணீரை
துடைக்க வேண்டியதல்லை’
எவ்வளவு சிக்கலில்லாத ஏற்பாடு இது
இக்கணம் எந்த அன்பில் இருக்கிறோமோ
அந்த அன்பைத் தவிர
எல்லாமே கடந்து செல்லப்பட வேண்டியது என்பது
அந்த சுயநலம் தாள முடியாதது என்ற போதும்
அன்பின் நாடோடிகளின் வாழ்க்கை
என்னை வியப்பிலாழ்த்துகிறது
அவர்கள் ஓருநாள் தங்கிய நிலங்களில்
மறு நாள் தங்குவதில்லை
ஒரு பருவம் கழிந்த ஊர்களில்
மறுபருவம் வாழ்வதில்லை
அமுதிட்டுத் தந்தவர் இல்லங்களிலும்
அடுத்த பொழுது இருப்பதில்லை
என்னைப் பாருங்கள்
என் அன்பின் மரம் பட்டுப்போன பிறகும்
அந்த மண்ணை
பிடிவாதமாய் பற்றிக்கொண்டு
அங்கேயே நின்றிருக்கிறேன்.
கொஞ்ச நாளில்
ஒரு கல்மரமாகி
நிலைபெற்று விடுவேன்
என்று கூட தோன்றுகிறது
சந்தேகமில்லை
அன்பின் நாடோடிகள் வாழ்க்கைத்தான்
சிறந்தது
7.7.2022
காலை 10.59
மனுஷ்ய புத்திரன்