இன்றுதான் அதை
திடீரென உணர்ந்தேன்
உனக்கும் எனக்கும் இடையே
இப்போது பொதுவான நபர் என்று
யாரும் இல்லை என்பதை
அதன் அபாயம்
என்னை திடுக்கிட வைக்கிறது
எனக்கு எது நடந்தாலும்
உனக்கது எப்போது தெரியும் என்று
நிச்சயமில்லை
உனக்கு எது நடந்தாலும்
எப்போதாவது அது எனக்குத் தெரியுமா
என்றுகூட தெரியவில்லை
ஒரு காற்றடித்தால் போதும்
ஒரு இலை உதிர்ந்து மறைவதுபோல
ஒருவருக்கொருவர்
காணாமல்போவோம் இல்லையா?
அணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணின் சுவரில்
அழிக்கப்பட்ட முக நூல் கணக்கில் இருளில்
நான் தலையை முட்டிக்கொள்வேன்
அவ்வளவுதான்
முதலில் நமக்கிடையே
பொதுவான நம்பிக்கைகள் இல்லாமல் போயின
பிறகு பொதுவான பயணங்கள் இல்லாமல் போயின
பிறகு பொதுவான மகிழ்ச்சிகள் இல்லாமல் போயின
பிறகு பொதுவான அந்தரங்கங்கள் இல்லாமல் போயின
பிறகு பொதுவான கனவுகள் இல்லாமல் போயின
பிறகு பொதுவான நினைவுகள் இல்லாமல் போயின
எல்லாவற்றிற்கும் பிறகு
நான் ஒரு சிறிய நம்பிக்கையை
தக்க வைத்திருந்தேன்
இப்போது பார்
நமக்கிடையே பொதுவான நபர் என்றும்
யாருமே இல்லை.
இது என்னை சஞ்சலமடைய வைக்கிறது
தனித்த தீவுகளிடையே
ஒரு சிறிய நூல் பாலங்களேனும் தேவை
அப்போதுதான்
அவற்றில் ஒன்று மூழ்கும்போது
மற்றொன்றினால் உணர்ந்து கொள்ள முடியும்
ஒரு உறவில்
பொதுவாக யாரும் இல்லாமல்போகும் நாளில்
நாம் ஒருவருக்கொருவர்
முற்றாக விடுதலை அடைந்துவிடுகிறோம் இல்லையா?
நாம் ஒருவருக்கொருவர்
முற்றிலுமாக ஆவியாகிறோம்
வெகுகாலத்திற்குப்பிறகு
தற்செயலாக
என்னைப்பற்றி
ஏதேனும் ஒன்றை நீ கேள்விப்படுவாய்
அது கண்ணாடியில் படியும்
ஒரு பனித்திரைபோல
ஒரு கணம் பட்டு பிறகு விலகிச் செல்லும்
6.12.2021
இரவு 9.48
மனுஷ்ய புத்திரன்