நான் அப்படியேதான் இருக்கிறேன்

எப்படியும்
ஒரு பனிக்கட்டியாக
கரைந்து போவேன் என்றோ
ஒரு கற்பூரமாக
எரிந்து தீர்ந்துவிடுவேன் என்றோ
நம்பித்தானே
எவ்வளவோ தூரம் சென்றுவிட்டாய்
எவ்வளவோ காலம் காணாதிருக்கிறாய்
இல்லை
நீ நினைத்ததுபோல நடக்கவில்லை
நான் அப்படியேதான் இருக்கிறேன்
நீருக்கடியில் கிடக்கும்
ஒரு பழங்கால சிற்பமாய்
இல்லை
ரத்தக்கரையுடன் எறியப்பட்ட
ஒரு குறுவாளாய்
எதனாலும் கரைந்துபோகாமல்
நீ பொறுமை இழக்கும்படி
எதனாலும்
தீர்ந்துபோகாதிருக்கிறேன்
24.9.2021
காலை 8.21
மனுஷ்ய புத்திரன்

 

No description available.