நீ நஞ்சாகிவிட்ட ஒரு உறவில் இருக்கிறாய்
………….
ஒரு நச்சுத்தன்மையுள்ள
உறவிலிருந்து எப்படி வெளியேறுவது?
நச்சுத்தன்மையுள்ள உறவு
உன்னை பதட்டங்களுக்கு ஆளாக்குகிறது
உன்னைப் புறக்கணித்துக்கொண்டே
உன்னைத் தக்கவைக்கிறது
உன் இயலாமைகள் மேல்
அது சவாரி செய்கிறது
நீ தன்மானத்தை இழப்பதை
அது பெருந்தன்மை என்று நம்ப வைக்கிறது
‘என்னைக் கவனி என்னைக் கவனி’ என
சதா உன்னை நச்சரிக்கிறது
நீ கவனிக்கும்போது
அது வேறு எங்கோ கவனித்துக்கொண்டிருக்கிறது
எல்லாம் ஒரு நாள் மாறும் என்ற
வீண் நம்பிக்கையைத் தருகிறது
மாறிவிட்டது என நீ நினைக்கும் நாளில்
அது எல்லாவற்றயும் சிதறடிக்கிறது
அது உன்னை நேசிப்பதுபோலவே
பிறரையும் நேசிக்கிறது
சில சமயம் உன்னை நேசிப்பதைவிட
அதிகமாக நேசிக்கிறது
உனக்கு வேறு தேர்வுகளே இல்லாததுபோல
உன்னை பலவீனமடையச் செய்கிறது
உன் வேலைகளில் அது ஆர்வமிழக்க வைக்கிறது
நீ வலிந்து உன்னை
சந்தோஷமாக காட்டிக்கொள்ள நிர்பந்திக்கிறது
எப்போது உன் தொண்டையில்
ஒரு துக்கத்தின் வலி இருக்கும்படி
அது ஆலகால விஷத்தை
உன் நெஞ்சில் நிறுத்துகிறது
இடையறாத குற்ற உணர்வை
அது உன் தலைக்குள் செலுத்துகிறது
அர்த்தமற்ற சமரசங்களை நோக்கி
அது உன்னைத் தள்ளுகிறது
அன்பின் சிறிய நினைவுகளின் வழியே
வெறுப்பின் பாலைவனங்களில்
உன்னை தோற்கடித்துக்கொண்டேயிருக்கிறது
உன்னை நேசித்தவர்களிடமிருந்தெல்லாம்
அது உன்னை துண்டிக்கிறது
சந்தேகத்தின் துர் நிழல்களை
எப்போதும் உன் இதயத்தில் தங்கச் செய்கிறது
அது தன் அகம்பாவத்யின் முன்
உன்னை நிபந்தனையற்று மண்டியிடச் செய்கிறது
மனதை கல்லாக்கிக்கொண்டு
நீ விலகிச் செல்லும்போது
அது உன்முன்னால் மண்டியிட்டு
உன்னை எந்த முடிவும் எடுக்கவிடாமல் செய்கிறது
அது உன் தூக்கத்தை நஞ்சாக்குகிறது
அது உன் சாப்பாட்டை நஞ்சாக்குகிறது
நீ சூடும் மலர்களை நஞ்சாக்குகிறது
உன் களங்கமற்ற மனதை நஞ்சாக்குகிறது
எதையாவது பற்றிக்கொண்டு மீளமாட்டோமா என
ஒரு நீர்ச்சுழலில் உன்னைச் சுழலவிடுகிறது
காலையில் கண் விழிக்கும்போது
காரணமில்லாமல் அழவைக்கிறது
ஆன் லைனில் நெடுநேரம்
வெறுமையுடன் எதையோ
பார்த்துக்கொண்டிருக்க செய்கிறது
ஒரு நச்சுத்தன்மையுள்ள
உறவிலிருந்து எப்படி வெளியேறுவது?
அது உன் குருதியில் கலந்துவிட்டது
ஒரு நஞ்சற்ற உறவிலிருந்து
ஒரு பறவை கிளையிலிருந்து பறப்பதுபோல
நீ வெளியேறிச் செல்ல முடியும்
நஞ்சாகிவிட்ட ஒரு உறவு அப்படியல்ல
அதை போதை மருந்தைப்போன்றது
உன் ரத்தத்தில்
அது தானே நீர்த்துப்போகும்வரை
நீ இப்படித்தான் தனித்திருக்க வேண்டும்
இப்படித்தான் கண்ணீர் சிந்தவேண்டும்
நீ யாராக இருந்தாயோ
அதுவாக இல்லாமலாகி
உனக்கு உன்னையே அடையாளம் தெரியாமல்
குழம்பவேண்டும்
நஞ்சாகிவிட்ட ஒரு உறவு
உன் இதயத்தின் ஆழத்தில்
ஒரு நாகத்தின் பற்தடங்களை
நிரந்தரமாக தங்கச் செய்கிறது
5.7.2022
பிற்பகல் 2.56
மனுஷ்ய புத்திரன்