என்னுடனேயே இருந்துவிடு
என்றா நான் உன்னிடம் கேட்டேன்?
இந்த அந்தியின் இருள்
ஒரு பாழும் கிணற்றின்
இருள்போல இருக்கிறது
அதன் உள்ளிருந்து கேட்கும் குரல்கள்
என்னை பயப்பட வைக்கின்றன
மழையில் நிழல் உருவங்கள்
தோன்றி மறைகின்றன
இந்த அந்தி முடியும் மட்டுமாவது
என்னை அணைத்துக்கொண்டிரேன்
அப்புறம் நான்
இரவின் ஆயிரம் நட்சத்திரங்களில்
ஒரு நட்சத்திரமாக
எங்கேனும் மெளனமாகிவிடுவேன்
6.7.2022
மாலை 5.10
மனுஷ்ய புத்திரன்