ப்ளூ டிக்

ஏன் இன்னும் ப்ளூ டிக் வரவில்லை?
எனக்கு சஞ்சலமாக இருக்கிறது
நான் என் சொல்லின் மலரொன்றை
உனக்கு அனுப்பினால்
ப்ளூ டிக் வந்தால்தான்
நீ அதை கையில் ஏந்தியதாகப் பொருள்
என் கண்ணீரின் துளி ஒன்றை
உனக்கு அனுப்பி வைக்கிறேன்
ப்ளூ டிக் வந்தால்தான்
நீ என் கண்னீரைத் துடைத்ததாகும்
அது என் காமத்தின் பெருமூச்சாட்டும்
துயரத்தின் விம்முதலாகட்டும்
நீ எதற்கும் மறுமொழி தருவதில்லை
எதையும் ஏற்பதுமில்லை
மறுப்பதுமில்லை
ஆனால் ப்ளூ டிக் நமக்கிடையே
இன்னும் இழைகள் அறுந்துவிடவில்லை
என்று சொல்கிறது
இன்னும் பாலங்கள் எரிந்துவிடவில்லை
என்று சொல்கிறது
சில சமயம் அந்த ப்ளூ டிக்
நீல அலைபோல நெஞ்சில் எழுகிறது
நம்பிக்கையின்
நீல வானம்போல கண்ணில் விழுகிறது
ஏன் இன்று
இன்னும் ப்ளூ டிக் வரவில்லை?
நான் மூடப்பட்ட கதவொன்றின் முன்
நின்றுகொண்டிருக்கிறேன்
அல்லது
பாதை தவறிய வனமொன்றில்
ஒரு ப்ளூ டிக் தருவதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
நீ மறுமுனையில் இருக்கிறாய் எனும்
எளிய ஆசுவாசம்
அதற்கு மேல் பற்றிக்கொள்ள
இந்த நாட்களில் எதுவும் இல்லை
நீ ஒருபோதும்
உன் ப்ளூ டிக்கை மறைத்துவைத்துவிடாதே
அது எனக்கிழைப்பட்ட அநீதிகளில்
மிகப்பெரியதாக இருக்கும்
எனது கடைசி நம்பிக்கையையும்
பறிப்பதாக இருக்கும்
நான் உன்னை பின் தொடரவில்லை
உன் ப்ளூ டிக்கை பின் தொடர்கிறேன்
நாடோடிகள்
நட்சத்திரங்களை பின்தொடர்ந்து
நடப்பதுபோல
அது எப்போதும்
ஒரு நம்பிக்கையின் சிறிய ஜன்னலை
திறந்து வைத்திருக்கிறது
புளு டிக்கின்
இரண்டு கொக்கிகளுக்கு நடுவே
ஊஞ்சல் கட்டுவதற்கு
ஒரு இடம் இருக்கிறது
6.7.2021
மாலை 5.14
மனுஷ்ய புத்திரன்